பள்ளியின் குழந்தைகளுக்கு ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள், புத்தகப்பைகள்
- ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள் மற்றும் புத்தகப் பைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
- இதுவரை ரூ.9.93 லட்சம் மதிப்பிலான கல்வி சேவைகளை இப்பள்ளிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
மகளிர் மேம்பாட்டுப் பணிகளை முதன்மைப் பணியாக மேற்கொண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனம் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களின் தேவைகளையும் சிறப்பாக குழந்தைகள், முதியோர் தொடர்பான பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் கிராமத்தில் அரசு மற்றும் சகோதரிகளால் இணைந்து நடத்தப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு கல்விச் சேவைகளை ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கி வருகிறது.
இருளர், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பள்ளிச் செல்லாக் குழந்தைகள் என 126 குழந்தைகள் இவ்வுறைவிடப் பள்ளியில் தங்கி சிறப்புக் கல்வி பயின்று வருகின்றனர்.
இம்மாணவர்களின் உடல் நலன் கருதியும், கல்வி நலனுக்காகவும் அப்பள்ளியில் பயிலும் 126 குழந்தைகளுக்கு ரூ. 72450-மதிப்பில் குளிர் கால உடைகள் மற்றும் ரூ. 56650- மதிப்பில் புத்தகப்பைகள் என மொத்தம் ரூ.1.29 லட்சம் மதிப்பில் உடைகள் மற்றும் புத்தகப் பைகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவிகளை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும், குழந்தைகளின் கல்வி நலனுக்காகவும் ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.9.93 லட்சம் மதிப்பிலான கல்வி சேவைகளை இப்பள்ளிக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.