உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து நீடிக்கும் பாத்திர தொழிலாளர்களுக்கானசம்பள உயர்வு பேச்சுவார்த்தை

Published On 2023-01-25 09:47 GMT   |   Update On 2023-01-25 09:47 GMT
  • தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
  • பித்தளைப் பாத்திரம் உற்பத்திக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் அனைத்து தொழிற் சங்க கூட்டு கமிட்டி சார்பில், அதன் தலைவர் வேலுச்சாமி (எல்.பி.எப்.,), செயலாளர் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), பொருளாளர் தேவராஜ் (ஏ.டி.பி.,), கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் (காமாட்சியம்மன் சங்கம்), எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர் குமாரசாமி, துணை செயலாளர் மதிவாணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழில் மந்த நிலையில் உள்ளது. எனவே பேச்சு வார்த்தையை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைப்பது. அதுவரை பழைய ஒப்பந்தத்தை கடை பிடிப்பது என்ற கருத்தை முன்வைத்தனர். இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளவில்லை.இதற்கு உற்பத்தியாளர் சங்கத்தினர், 28ல் சிறப்பு மகாசபை கூட்டம் நடத்த உள்ளோம். அதில் நிர்வாகிகள் கருத்தை கேட்டு தகவல் தெரிவிக்கிறோம் என்றனர். அதனை தொடர்ந்து, பித்தளைப் பாத்திரம் உற்பத்திக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க துணை தலைவர் மனோகர், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் கூறிய கருத்தையே இவர்களும் தெரிவிக்கவே, தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மறு தேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News