உள்ளூர் செய்திகள்

போடி பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை தரமற்ற உணவு, பிளாஸ்டிக் பறிமுதல்

Published On 2022-07-20 03:04 GMT   |   Update On 2022-07-20 03:04 GMT
  • போடியில் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • இந்த அதிரடி ஆய்வில் அனைத்து கடைகளிலும் சுமார் 49 மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஏழு மாதிரிகளில் தரமற்ற கலப்பட ரசாயனங்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

போடியில் பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் உத்தரவின் படி போடி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா தலைமையில் கம்பம், உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் கலர் ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள், முகவரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவை சுமார் 22 கிலோ அளவில் கைப்பற்றப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் கடைகளில் முதல் முறை என்பதால் அனைவரையும் உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

பஸ் நிலையத்தில் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

போடி கீழத்தெரு மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் டீக்கடை ஒன்றில் உணவு பதார்த்தங்கள் தரம் இல்லாமல் தயாரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அங்கு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கைப்பற்றப்பட்ட எண்ணை பதார்த்தங்கள் உடனடியாக நடமாடும் உணவு ஆய்வு வண்டி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட கலர் ரசாயனங்கள் கலந்து இருப்பதைக் கண்டு தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய எண்ணை பொருட்கள் அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டது.

மீண்டும் இது போல் தவறு நடந்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இந்த அதிரடி ஆய்வில் அனைத்து கடைகளிலும் சுமார் 49 மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஏழு மாதிரிகளில் தரமற்ற கலப்பட ரசாயனங்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டது.

Tags:    

Similar News