உள்ளூர் செய்திகள்

கருவாடு காய வைக்கும் பணியில் மீனவர்கள்.

பழையாரில், கருவாடு உலர் தளம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை

Published On 2023-03-26 15:23 IST   |   Update On 2023-03-26 15:23:00 IST
  • 13 வகையான மீன்களை மக்கள் அதிகளவில சமைத்து உண்கின்றனர்.
  • பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு வருகிறது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இங்கு பல வகையான மீன்கள் பிடிக்கப்பட்டாலும் கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், பொறுவாய்,குத்து வாய், வாழை, வெள்ளுருட்டான், கவலை, சுறா உள்ளிட்ட 13 வகையான மீன்களை மக்கள் அதிக அளவில சமைத்து உண்கின்றனர்.

அதேசமயம் இந்த வகை மீன்களை கருவாடாக உண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வகையான மீன்களை கருவாடாக வாங்கி சமைத்து உண்பதை மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து பழையார் கருவாடு வியாபாரி பொன்னையா கூறுகையில், பழையார் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த பருவ மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், கடற்கரை பகுதிகளில் போதுமான மீன் வரத்து இல்லாததாலும், கருவாடு தேவைக்கான மீன்வரத்து குறைந்து காணப்படுகிறது.

தற்போது இங்கு மீன்களை வாங்கி உப்புகள் தெளித்து பதப்படுத்தி கருவாடுகளை காய வைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் பழையாறு கிராமத்தில் உள்ள கருவாடுகளை வாங்கி செல்வது வழக்கம். அதாவது நெத்திலி,பாறை, சுறா, திருக்கை ,காரை ஆகிய மீன்களின் கருவாடுகள் பதப்படுத்தப்பட்டு அவற்றை நன்கு காய வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு தினந்தோறும் பல்லடம், ஒட்டன்சத்திரம்,திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறோம்.

ஒரு நாளைக்கு இந்த துறைமுகத்தில் இருந்து 2 டன் மற்றும் அதற்கு மேலான கருவாடுகள் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்கப்படுவது வழக்கம்.

அதன்படி கருவாடுகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கபட்டு வந்த நிலையில் தற்போது மீன் வரத்து குறைவின் காரணமாக கருவாடு உற்பத்தி குறைந்துள்ளது.

மேலும் பழையார் துறைமுகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News