விபத்தில்லா தீபாவளி குறித்து அம்பத்தூரில், தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ, மாணவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தி கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அம்பத்தூர்:
விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அம்பத்தூர் தீயணைப்பு மீட்புப்பணி வீரர்கள் மற்றும் சேது பாஸ்கரா பள்ளியின் மாணவ, மாணவிகள் 750-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரமாண்ட விழிப்புணர்வு பேரணியை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் துவக்கி வைத்தார். சுமார் 5 கி.மீ.தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தி கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சென்னை புறநகர் உதவி மாவட்ட அலுவலர்கள் பொன் மாரியப்பன், திருமுருகன், சேது பாஸ்கரா பள்ளியின் முதல்வர் செல்வகுமார் மற்றும் அம்பத்தூர் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன், பக்தவச்சலம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக வில்லிவாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நிலைய அலுவலர் செல்வன் தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என 300-க்கும் மேற்பட்டோருக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்போடு கையாள்வது என்பதை செய்முறை மூலம் விலக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.