உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் சர்வீஸ் குடோனில் தீ விபத்து- 50 மின்சார வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

Published On 2022-12-18 07:56 GMT   |   Update On 2022-12-18 07:56 GMT
  • காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் மின்சார மோட்டார் சைக்கிள் சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார்.

இரவில் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை வந்து தீப்பற்றி எரிந்தது.இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மளமளவென பரவிய தீயானது சர்வீஸ் நிலையம் முழுவதும் பரவி உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டார் சைக்கிள்களும், உதிரி பாகங்களும், பேட்டரிகளும், தீயில் எரிந்து நாசமானது.

எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாகங்களால் ஆனது என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News