சிந்தாதிரிபேட்டையில் கால் சென்டர் பெண் ஊழியர் மர்ம மரணம்
- மஞ்சுளா- சந்தோஷ் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவர் மரணம் அடைந்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
- பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்தால் தான் மஞ்சுளா மரணத்திற்கான காரணம் தெரியவரும்.
சென்னை:
தஞ்சாவூரை சேர்ந்த மஞ்சுளா (வயது24). சென்னை சிந்தாதிரி பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருடன் சந்தோஷ் என்ற ஆண் நண்பரும் தங்கி இருந்தார்.
இருவரும் திருமணம் ஆகாமல் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மஞ்சுளா கால் சென்டரில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுளா தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக சிந்தாதிரிபேட்டை போலீசில் சந்தோஷ் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையின்போது மஞ்சுளாவின் முகம் மற்றும் தலையில் ரத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மஞ்சுளா- சந்தோஷ் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவர் மரணம் அடைந்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்து கொண்டால் உடலில் ரத்த காயம் ஏன் ஏற்பட வேண்டும் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
மஞ்சுளாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்தால் தான் மஞ்சுளா மரணத்திற்கான காரணம் தெரியவரும். சந்தோஷிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.