உள்ளூர் செய்திகள்

பைக்கில் தப்பிச்சென்ற தந்தை-மகன்.

திண்டுக்கல்லில் திருமண மண்டபத்தில் 16 பவுன் திருடிய தந்தை-மகன்

Published On 2023-09-28 07:05 GMT   |   Update On 2023-09-28 07:05 GMT
  • 2 மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.
  • போலீசார் விசாரணை நடத்தி நகை திருடிய தந்தை-மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மகனுக்கும், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது மணமகன் அறையில் இருந்த 16 பவுன் நகை திருடுபோனது.

திருமண வீட்டில் கலந்து கொள்வது போல வந்த மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ்எட்வர்டு, ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணையை தொடங்கினர்.

திருமண வீட்டில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்த கேமராமேனிடம் இருந்த வீடியோக்களை போலீசார் பார்வையிட்டனர். இதில் இருவீட்டாருக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 பேர் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.

அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். நகை திருட்டில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் நரசிம்மபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(48) மற்றும் அவரது 16 வயது மகன் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 16 பவுன் நகை மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News