உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்

Published On 2025-02-08 14:54 IST   |   Update On 2025-02-08 14:54:00 IST
  • ஒரு கிலோ ரூ.10 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநில தேவை குறைந்துள்ளது.
  • ஒரு சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று தக்காளிகளை வாங்கி வாகனங்களில் வைத்து தெருக்களில் விற்பனை செய்து வந்தனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் காந்தி, காமராஜர் மார்க்கெட்டுக்கு தினந்தோறும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விற்பனையானது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.200 என விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் விற்றுச் சென்றனர். ஒரு சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று தக்காளிகளை வாங்கி வாகனங்களில் வைத்து தெருக்களில் விற்பனை செய்து வந்தனர்.

ஒரு கிலோ ரூ.10 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநில தேவை குறைந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து இங்கிருந்து அனுப்பப்படும் தக்காளி முற்றிலும் நின்று விட்டது. இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் தக்காளி குறைந்து போனது.

இன்று காலை காமராஜர் மார்க்கெட்டுக்கு 15 ஆயிரம் பெட்டிகள் வரையிலும், காந்தி மார்க்கெட்டுக்கு 20 ஆயிரம் பெட்டிகள் வரையிலும் விற்பனைக்கு வந்தன. ஒரு பெட்டி ரூ.220 வரை விற்பனையான நிலையில் ஏற்கனவே இருப்பு வைத்த தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தக்காளிகளை விற்பனை செய்யாமல் குப்பையில் கொட்டிச் சென்றனர். சாதாரணமாக இந்த சீசனில் தக்காளிக்கு போதிய விலை கிடைத்து வந்த போதிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடும் பனிப்பொழிவுக்கு இடையே செடிகளை பாதுகாத்து பராமரித்து பின்னர் அவற்றுக்கு பறிப்பு கூலி கொடுத்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் கூலி வரை செய்த செலவு தொகை கூட சந்தையில் கிடைப்பதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். ஏற்கனவே தக்காளி விலை வீழ்ச்சி அடையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க எந்திரம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டு தக்காளி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News