தியாகதுருகம் பகுதியில் விவசாயிகள் மானாவாரி கம்பு விதைத்து பயனடையலாம்: வேளாண் உதவி இயக்குனர் தகவல்
- தியாகதுருகம் பகுதியில் விவசாயிகள் மானாவாரி கம்பு விதைத்து பயனடையலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
- சத்தான சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-தியாகதுருகம் பகுதியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு பருவத்தில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி கம்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது தியாகதுருகம் பகுதியில் பரவலாக சுமார் 100 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை கொண்டு மானாவாரியாக சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது நிலத்தினை உழவு செய்து கம்பு விதைத்து பயனடையலாம். மேலும் மானாவாரி சாகுபடிக்குத் தேவையான தனசக்தி உயர் விளைச்சல் ரக கம்பு விதைகள் தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையம் 1,300 கிலோ இருப்பு உள்ளது. சிறுதானிய நுண்ணூட்ட உரம், உயிர் உரம் மற்றும் கம்பு விதைகளை சத்தான சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யலாம். கம்பு பயிர் 90 நாட்களில் அறுவடைக்கு வரும். கம்பில் உடலுக்கு அவசியமான அதிக அளவு இரும்பு, துத்தநாக நுண் சத்துக்கள் உள்ளது. எனவே விவசாயிகள் மானாவாரி பருவத்தில் கம்பு விதைத்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.