உள்ளூர் செய்திகள்

யானை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2022-10-06 09:56 GMT   |   Update On 2022-10-06 09:56 GMT
  • திடீரென வந்த ஒற்றை யானை கிருஷ்ணப்பாவை தனது தந்தத்தால் வலது தொடையில் குத்தி தூக்கி வீசி விட்டுச் சென்றது.
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாத்தனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 70 ). இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். இரவு நேரமாகியும் மாடுகள் வீட்டிற்கு வராதனால் மாடுகளைத் தேடிச் சென்றார்.

அப்போது சாத்தனக்கல்லை சேர்ந்த நாகப்பா என்பவரது நிலத்தின் அருகே சென்றபோது அங்கு திடீரென வந்த ஒற்றை யானை கிருஷ்ணப்பாவை தனது தந்தத்தால் வலது தொடையில் குத்தி தூக்கி வீசி விட்டுச் சென்றது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த கிருஷ்ணப்பாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று யானைகளை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இப்பகுதியில் யானைகள் அடிக்கடி விவசாய நிலத்திற்குள் புகுந்து விளைபயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்கினறன. விவசாயிகளை தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனால் வனத்துறையினர் முகாமிட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News