உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பாழடைந்த கிணற்றில் விழுந்து ஒரு வார காலமாக தவித்து வந்த பூனையை மீட்ட தீயணைப்பு துறையினர்

Published On 2022-11-13 15:08 IST   |   Update On 2022-11-13 15:08:00 IST
  • கிணற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரியும் பூனை ஒன்று தவறி விழுந்து விட்டது.
  • தீயணைப்புத்துறை வீரர்கள் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி அரை மணி நேர போராட்டத்திற்கு பூனையை உயிருடன் மீட்டனர்.

ஓசூர்,

ஓசூர் கும்பார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 60). இவரது வீட்டில் 40 அடி ஆழம் உள்ள பழமையான பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரியும் பூனை ஒன்று தவறி விழுந்து விட்டது. பூனையும் அலறல் சத்தம் அவ்வப்போது கேட்டு வந்த நிலையில் அதனை அந்த பகுதியில் யாரும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பசியால் துடித்த பூனை அதிகமாக சத்தம் போட்டு அலறியது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை எட்டிப்பார்த்தபோது கிணற்றுக்குள் பூனை விழுந்து தவித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக அவர்கள் ஓசூர் தீயணைப்புத ்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி அரை மணி நேர போராட்டத்திற்கு பூனையை உயிருடன் மீட்டனர்.

அந்த பூனை அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் இப்ராகிம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பூனை மீட்கப்பட்டது குறித்து அறிந்த அவர் அங்கு சென்று பூனையை மகிழ்ச்சியுடன் கடைக்கு எடுத்து சென்றார்.

Tags:    

Similar News