உள்ளூர் செய்திகள்

ஒரத்துப்பாளையம் அணை நீர்மட்டம் ஒேர நாளில் 10 அடி உயர்ந்தது

Published On 2022-07-16 09:33 GMT   |   Update On 2022-07-16 09:33 GMT
  • ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.
  • இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னிமலை:

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட ங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையொட்டி சென்னி மலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது.

நேற்று காலை 6 மணியளவில் அணையில் 2. 5 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நேற்று பகலில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. படிப்படியாக மாலையில் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் நேற்று மாலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 11 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வினாடிக்கு 1200 கனஅடி நீர்வரத்து இருந்தது. 450 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. டி.டி.எஸ். உப்புத் தன்மை 1800 ஆக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. அதிக அளவு வெள்ளப்பெருக்கால் நீர்வரத்து அதிகரித்ததால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் மதகுகளில் வெளியேற்றப்பட்டது.

இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News