உள்ளூர் செய்திகள்

பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு

Published On 2023-05-06 10:07 GMT   |   Update On 2023-05-06 10:07 GMT
  • சென்னிமலை வட்டார பகுதியில் மாம்பழ குடோன்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
  • வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

சென்னிமலை:

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் அறிவுறுத்துதலின் படியும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த மாம்பழ விற்பனை கடைகள், சிறிய மாம்பழ கடைகள் மற்றும் பழ குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னிமலை வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆய்வு செய்தார்.

அப்போது ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் பழ வியாபாரிகளிடம் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதால் அந்த பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

Tags:    

Similar News