ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம்.
ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை
- சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- இதேப்போல் கேரட், பீட்ரூட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு காரணங்களால் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்தது. சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையானது.
இதைத்தொடர்ந்து தக்காளி வரத்து சற்று அதிகரித்து இருப்பதால் ரூ.100-110 வரை விற்கப்பட்டு வருகிறது. இதேப்போல் ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. தற்போது ரூ.100-110 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தக்காளியை தொடர்ந்து சமீபகாலமாக பச்சை மிளகாய், பீன்ஸ், கருப்பு அவரை, இஞ்சி, சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதேப்போல் கேரட், பீட்ரூட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ராசிபுரம், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 16 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. இந்நிலையில் விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர தொடங்கியது.
கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து 8 டன்னாக குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் சில்லரை விற்பனையில் ரூ.120-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.110-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.110-க்கும், கருப்பு அவரை ஒரு கிலோ ரூ.110-க்கும் விற்கப்படுகிறது. சமீப காலமாக இஞ்சியின் விலையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி ஒரு கிலோ விலை கடந்து ஒரு மாதமாக விலை ஏறி வருகிறது. இன்று புதிய உச்சமாக ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்கப்பட்டது. பழைய இஞ்சி ஒரு கிலோ 300-க்கும், புதிய இஞ்சி ஒரு கிலோ ரூ.180-190-க்கும் விற்கப்படுகிறது.
இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சமையலை பொறுத்தவரை தக்காளி, சின்ன வெங்காயம் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
முள்ளங்கி-35, வெண்டைக்காய்-30, கத்திரிக்காய்-60, பாவை க்காய்-60, பீர்க்கங்காய்-60, புடலங்காய்-40, கொத்தவரங்காய்-30-40, சுரைக்காய்-20, முருங்கைக்காய்-60, சவ்சவ்-25, பீட்ரூட்-60, கேரட்-80, முட்டை கோஸ்-25, காலிப் பிளவர்-40, பட்டவரை-60, உருளைக்கிழங்கு-40, பெரிய வெங்காயம்-30.