உள்ளூர் செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

Published On 2022-12-27 14:43 IST   |   Update On 2022-12-27 14:43:00 IST
  • கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
  • ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கடந்த 23ஆம் தேதி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் ரோஸ் கலர் அறிக்கை சட்டை, ரோஸ் கலர் வேட்டி அணிந்திருந்தார். மேலும் வலது முன் கையில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் ஒரு காயத்தழும்பும் இருந்தது.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த முதியவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதி சேர்ந்த ஆறுமுகம் (69) என தெரிய வந்தது.

இவர் கடந்த 23ஆம் தேதி பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொடுமுடி தாண்டி சென்ற போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தது தெரிய வந்தது.

இதன் பின்னர் ரயில்வே போலீசார் கரூரில் உள்ள முகவரியில் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இல்லை என தெரிய வந்தது.

இந்நிலையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News