உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்திய 20 கிலோ போதை பொருட்கள் சிக்கியது

Published On 2022-12-21 09:36 GMT   |   Update On 2022-12-21 09:36 GMT
  • பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது.
  • ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு:

வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சேலத்தை தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுவரன், ரெயில்வே போலீசார் அருள்செல்வம், ராஜவேல், சரவணகுமார் ஆகியோர் தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை செய்தனர்.

அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே வெள்ளை நிற பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அதனை திறந்து பார்த்தபோது அதில் 20 கிலோ போதை பொருட்கள் (குட்கா) இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் கேட்டபோது இது தங்களுடையது இல்லை என பயணிகள் தெரிவித்தனர். போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கடத்தல் கும்பல் குட்காவை அங்கேயே விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.

பின்னர் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்ததும் போலீசார் கைப்பற்றிய 20 கிலோ போதை பொருட்களை மீட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து போதை பொட்களை கடத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News