உள்ளூர் செய்திகள்

கியாஸ் கசிவால் 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்

Published On 2022-08-10 15:18 IST   |   Update On 2022-08-10 15:18:00 IST
  • சம்பவத்தன்று துரைசாமி குடும்பத்தார் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து அருகில் இருந்த குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.
  • இந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் மாரநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது மகன் சதீஷ்குமார், துரைசாமியின் வீட்டின் அருகிலேயே குடிசை அமைத்து அவரும் அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரது குடிசை வீடும் தென்னங்கீற்றால் மேயப்பட்டு, தகர சீட்டு போட்டு உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று துரைசாமி குடும்பத்தார் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து அருகில் இருந்த குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.

காற்று வேகத்தின் காரணமாக அருகில் இருந்த சதீஷ்குமார் வீட்டு குடிசைக்கும் தீ பரவியது. 2 குடிசைகளும் கொழுந்து விட்டு எரிய தொடங்கின.

இதனையடுத்து தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

Tags:    

Similar News