உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி அருகே சுற்றி வந்த ஒற்றை யானையால் மக்கள் பீதி

Published On 2025-08-02 10:42 IST   |   Update On 2025-08-02 10:42:00 IST
  • சிக்கலி கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது.
  • யானை சுற்றி வந்ததால் இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி அடுத்த சிக்கலி கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது. விலை நிலங்கள் வழியாக குடியிருப்பு நோக்கி வந்த ஒற்றை யானையை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிக்கலி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகள் அருகில் அந்த காட்டு யானை சுற்றி வந்தது. நீண்ட நேரமாக அந்த பகுதியை யானை சுற்றி வந்ததால் இதுகுறித்து வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய அந்த ஒற்றை யானை அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இதை அடுத்து வனத்துறையினர் அதிக சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் பின்னரே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

Tags:    

Similar News