உள்ளூர் செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட எந்திரத்தில் குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் காட்சி.

கொடைக்கானலில் குப்பையில் இருந்து மின்சாரம், உரங்கள் தயாரிப்பு

Update: 2022-07-03 04:49 GMT
  • மக்கும் குப்பைகளாக இருக்கக்கூடிய காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள்.
  • உயிரிவழி மீத்தேனாக்கல் முறையில் மின்சாரமாக மாற்றப்பட்டு அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிய வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி ஆகும். ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே கொடைக்கானலில் வீடுகள் மற்றும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகமானதால் இங்கு கொட்டப்படும் குப்பைகளின் அளவும் அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு 17 மெட்ரிக் டன் குப்பைகள் வரை கொட்டப்படுவதாகவும் இதில் 11 மெட்ரிக் டன் மக்கும் குப்பையாகவும் ஆறு மெட்ரிக் டன் மக்காத குப்பைகளாகவும் இருந்து வருகிறது.

நகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை ஒன்றாக சேர்த்து செண்பகனூர் பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுக்கப்படுகிறது.

தற்போது புது திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது கொடைக்கானல் நகராட்சி. இதில் மக்கும் குப்பைகளாக இருக்கக்கூடிய காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். மேலும் உயிரி வழி மீத்தேனாக்கல் முறையில் மக்கும் கழிவுகளை இங்கு அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய உயிரி வாயு மற்றும் இயற்கை உர ஆலை பகுதியில் கொட்டப்படுகிறது. ரூ.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பகுதியில் மக்கும் கழிவுகள் மூலம் ஒரு வாயு உருவாக்கப்படுகிறது.

இந்த வாயு உயிரிவழி மீத்தேனாக்கல் முறையில் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதனை அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தெரு விளக்குகள் எரிய பயன்படுத்துகிறது. இந்த மக்கும் குப்பைகள் மூலமாக இதுவரை 200-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரிந்து வருவதாகவும் தற்போது இந்த திட்டம் வெற்றிகரமாக இருப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இருக்கக் கூடிய 6 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இயற்கை உரங்களை கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைப்பகுதி விவசாயிகளுக்கு கொடுத்து வருவதாகவும் இந்த உரங்கள் தற்போது மழை காய்கறிகளுக்கு சத்தான உரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News