பழவேற்காடு பகுதியில் கடலும், ஏரியும் சந்திக்கும் பகுதியில் முகத்துவாரம் அடைபட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
- மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்திய பொருளாதாரத்திற்கு உதவும் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய மீன்பிடி தொழில் நடைபெறும் பகுதியாகவும், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய ஏரியான பழவேற்காடு ஏரியும் வங்கக் கடலும் இணையக்கூடிய முகத்துவாரம் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களுக்கும், மீன் பிடி தொழில் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் முகத்துவாரம் அடைபடுவதும் அதனை மீனவ மக்கள் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலங்களில் பள்ளம் தோண்டி விடுவதும் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்காக ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த ஆண்டும் வழக்கம் போல முகத்துவாரம் குறுகிய நிலையில் மணல் தூர்ந்து முற்றிலுமாக முகத்துவாரம் அடைப்பட்டு விட்டது. இதனால் பழவேற்காடு ஏரிபகுதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லவில்லை. பழவேற்காட்டில் துறைமுகம் இல்லாததால் ஏரியில் இருந்து தான் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கிறார்கள். இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் மீன்கள், நண்டு, இறால் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
சுமார் 50 ஆயிரம் மக்களின் நேரடியான வாழ்வாதாரத்தை பாதிக்கும் முகத்துவாரம் அடைபட்டுள்ள இந்த சூழலில் மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி இதுகுறித்து கோட்டகுப்பத்தில் மீனவ நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் மீனவ கிராமங்களிலேயே வசூல் செய்து 22-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தலா ரூ.50,000 வீதம் வசூலித்து ஜேசிபி, மற்றும் ராட்சத இயந்திரங்களுடன் பணி ஆரம்பிக்கப்படுவதாகவும், வருகின்ற மழைக்காலத்துக்கு முன்பு முகத்துவாரத்தை தூர்வாராவிட்டால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படுவதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முகதுவாரம் தூர்வாரும் பணிக்காக இன்று பல கிராம நிர்வாகிகளுடன் படகில் சென்று இடத்தை ஆய்வு செய்து பணியை ஆரம்பித்து உள்ளதாகவும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.