உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் மழை நீர் கால்வாய் பணி முடியாததால் குளம்போல் தேங்கிய தண்ணீர்- பொதுமக்கள் தவிப்பு

Published On 2023-11-05 09:47 GMT   |   Update On 2023-11-05 09:47 GMT
  • பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
  • பழவேற்காடு நெடுஞ்சாலை திருப்பாலைவனத்தில் மழையினால் சாலை சேதமடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகின்றன.

பொன்னேரி:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக விட்டு விட்டு கனமழை கொட்டுகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடத்திற்கு மேலாக நடை பெற்று வரும் நிலையில் முழுமையாக முடிக்கப்படாததால் என். ஜி. ஓ. நகர், பர்மா நகர், ஜீவா தெரு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கின. மேலும் அந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் 16-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக மாறிகாணப்படுகிறது. இதேபோல் ரயில் நிலையம் அருகில் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

பொன்னேரி-மீஞ்சூர் சாலை அருகே தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. பொன்னேரி-பழவேற்காடு சாலை திருவாயர்பாடி ரெயில்வே மேம்பாலம் அடியில் 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நகராட்சி நிர்வாக பணியாளர்கள் 3 மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினர்.

பலத்த மழை காரணமாக நேற்று இரவு பொன்னேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மூன்று மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலை திருப்பாலைவனத்தில் மழையினால் சாலை சேதமடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகின்றன. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்க வருகின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பொன்னேரியில் 5 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News