தனியார் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி கலெக்டரிடம் மனு கொடுத்த போது எடுத்த படம்.
பள்ளி வாகனத்தை இயக்கி 2 உயிர்களை பலி வாங்கிய வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு
- காளப்பன அள்ளி ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பன அள்ளி ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தருமபுரி நகரப் பகுதியை அடுத்த சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குண்டல்பட்டி அருகே தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி குழந்தைகளை ஏற்றி வருவதற்கு தனியாரிடம் ஒப்பந்த முறையில் வாகனம் வைத்துள்ளது.
இந்த வாகன ஓட்டிகள் நேற்று காலை சுமார் 8 மணிக்கு மாட்லாம்பட்டி அடுத்த காளப்பன அள்ளி சாலை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றி கொண்டு சாலையில் வந்து கொ ண்டிருந்தபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளார்.
விபத்தின்போது 3 பள்ளி வாகனங்களை அடுத்தடுத்து இயக்கியுள்ளனர்.மேலும் பள்ளி வாகனத்தை அதிக சத்தத்துடன் கூடிய இசையை கேட்டுக்கொண்டே ஓட்டுகின்றனர்.
இந்த விபத்து நடந்ததற்கு முழு காரணம் பள்ளி நிர்வாகமே ஆகும். மேலும் அந்த பள்ளி வாகனத்தில் 20 பள்ளி குழந்தைகள் இருந்தார்கள். விபத்து ஏற்படும் பகுதிக்கு அருகில் மேலும் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கிக்கொண்டு வருகிறது.
அந்த பள்ளிக்கூடம் விட்டிருந்தால் அங்கிருந்து வெளியே வரும் குழந்தைகளின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க உடனடியாக மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்கள் இயக்குவது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.