உள்ளூர் செய்திகள்

 குடிநீர் குழாய் விழுந்து விடாமல் இருக்க குச்சியை கட்டி நிற்க வைத்துள்ள மக்கள்.

குடிநீர் குழாய் விழுந்து விடாமல் இருக்க குச்சி கட்டி தண்ணீர் பிடிக்கும் பொதுமக்கள்

Published On 2022-12-21 15:17 IST   |   Update On 2022-12-21 15:17:00 IST
  • குச்சி மூலம் முட்டு கொடுத்து குடிநீர் பிடிக்கும் அவலம் நடந்து வருகிறது.
  • பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாப்பிரெட்டிபட்டி, 

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், குடிநீர் குழாய் நிற்பதற்கு குச்சி மூலம் முட்டு கொடுத்து குடிநீர் பிடிக்கும் அவலம் நடந்து வருகிறது.

பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடி பேருந்து நிலையம் எதிரே உள்ள மாதா கோவில் தெரு, வினோபாஜி தெரு போன்ற பகுதிகளில் பட்டியல் இன மக்கள் பெருமளவு வாழ்ந்து வருகின்றனர்.

மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், எனவே குடிநீர் குழாய்கள் புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை அடுத்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி சார்பில் பல லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய்கள் மாதா கோவில் தெரு, வினோபாஜி தெரு, காலனி பகுதி போன்ற இடங்களில் அமைக்கும் பணி தொடங்கியது.

சில இடங்களில் இரும்பு குழாய்கள் மூலமாகவும், சில இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகள் மூலமாகவும், குடிநீர் வழங்கும் திட்டம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் குடிநீர் குழாய்கள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாலும், குடிநீர் பைப் நிற்பதற்கு கான்கிரீட் தூண் கட்டாததாலும் குடிநீர் குழாய் உடைந்து விடும் சூழல் நிலவுகின்றது.

தண்ணீர் பிடிக்கும் போது பெரும் சிரமத்திற்கு ஆளாகிய பொதுமக்கள் குடிநீர் குழாய் கீழே விழுந்து விடாமல் உடன் குச்சிகளை நட்டு கட்டி வைத்து குடி தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் தரமற்ற முறையில் மெல்லியரக பி.வி.சி. பைப்புகளை அமைத்துள்ளதால் குடிநீர் பிடிக்க முடிவதில்லை, குடிநீரும் போதிய அளவில் வராமல் சொட்டு நீர் பாசனம் போல வருகிறது.

எனவே எங்களுக்கு தரமான முறையில் குடிநீர் குழாய்கள் அமைத்து குழாய் பகுதியில் கான்கிரீட் தூண்களை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனவும், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதிகளில் பெரும் பள்ளங்கள் இருப்பதால் அவைகளை மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குடிநீர் தேவைக்காக பல திட்டங்களை வகுத்து அமைத்துக் கொடுத்தாலும், இது போன்ற தரமற்ற பணிகளால் பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News