உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே இரட்டை கொலை வழக்கு: தமிழகம், புதுவையை சேர்ந்த ரவுடிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-06-12 07:21 GMT   |   Update On 2023-06-12 07:21 GMT
  • அருண்குமாரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது.
  • தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் தினமும் மயிலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். 

இவர்கள் நேற்று முன்தினம் மைலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது. அப்போது வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் வந்த போது, இவர்களை மர்மகும்பல் மடக்கி சுற்றி வளைத்தது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த மர்மகும்பல், அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இது தொடர்பாக வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையி லான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை யில் தனிப்படை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசாரின் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இவர் கூலிப்படையை வைத்தோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ அருண்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களை வைத்தே அருண்குமாரை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயத்தில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் சரணடைய உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News