ஆர்ப்பாட்டத்தின்போது தம்பிதுரை எம்.பி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம்.
தமிழ் மீது பற்று இல்லாததால் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்த தி.மு.க- தம்பிதுரை எம்.பி பேட்டி
- தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க., தமிழைப் பற்றியும், சோழர்களை பற்றியும் பேசிவிட்டு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நாடா ளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை, புறக்கணித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மேற்கு அ.தி.மு.க சார்பில், திமுக அரசை கண்டித்து ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி, கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மேலும், கள்ளச்சாராயத்தால், பல உயிர்களை பலி வாங்கியதாக, தி.மு.க அரசை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு, அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் கண்டனம் தெரிவித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இதில், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், மாவட்ட துணைசெயலாளர் மதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் நடராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இதைவிட தமிழர்களுக்கு ஒரு பெருமை உண்டா? என்றால் இல்லையென்றே சொல்லலாம்.
தி.மு.க., தமிழைப் பற்றியும், சோழர்களை பற்றியும் பேசிவிட்டு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நாடா ளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை, புறக்கணித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
இந்த செயல், அவர்களுக்கு தமிழ்ப்பற்று இல்லை என்பதையே காட்டுகிறது. கரூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். அதனை திசை திருப்பவும், ஊழலை மறைக்கவுமே, தி.மு.க. முயன்று வருகிறது.
செந்தில்பாலாஜி, அந்த முகாமிலிருந்து வெளியேற்ற ப்படும் காலம் நெருங்கி விட்டது. ரெய்டுக்கு வந்த மத்திய அரசு அதிகாரிகளை, அடித்து உதைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த விடியா ஆட்சி, விரைவில் அகன்று, தமிழக மக்களுக்கு புதிய விடியல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.