உள்ளூர் செய்திகள்

திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி. ஞான திரவியத்திற்கு கட்சி தலைமை நோட்டீஸ்

Published On 2023-06-27 08:13 IST   |   Update On 2023-06-27 11:26:00 IST
  • கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்
  • 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்ற அடிதடி மோதல் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு நடைபெற்று வரும் தகராறுக்கு திருநெல்வேலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் (தி.மு.க.)தான் காரணம் என்று மத போதகர் காட்பிரே நோபுள் வீடியோ வெளியிட்டார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வீடியோ வெளியான பிறகு, ஆத்திரம் அடைந்த எம்.பி.யின் ஆட்கள் அவரை அடித்து உதைத்து ஓடஓட விரட்டினார்கள். இந்த சம்பவம் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தி.மு.க. தலைமைக்கும் இப்பிரச்சினை தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞானதிரவியம் எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.

இதையொட்டி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஞான திரவியம் எம்.பி.யிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் ''திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி கழக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்திற்கு புகார் வரப்பெற்றுள்ளது.

எனவே, ஞானதிரவியம் எம்.பி.யின் இத்தகைய செயல் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால் இது குறித்த அவரது விளக்கத்தையும், செயல்பாடுகளையும், இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News