உள்ளூர் செய்திகள்

தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்- கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் கைது

Published On 2022-07-05 04:22 GMT   |   Update On 2022-07-05 04:22 GMT
  • பேட்மிட்டன் கிளப்பில் உறுப்பினராக சேருவதற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.1000 மற்றும் மாத கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.
  • மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், உயர் அதிகாரிகளுக்கு காலதாமதமாக தகவல் அளித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

குனியமுத்தூர்:

கோவை மாவட்டம் கோவைப்புதூர் அருகே உள்ள அலமு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார்.

இவர் மரகதம் நகரில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கிளப்பில் சேருவதற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.1000 மற்றும் மாத கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.

இந்தநிலையில் கோவை மாநகராட்சி 90-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ் மற்றும் மார்ட்டின், ஜான்சன், அபுராகீர், சதார்க் ஆகியோர் உறுப்பினர் கட்டணம் செலுத்தாமல் மாத கட்டணம் மட்டும் செலுத்தி பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இதுகுறித்து கார்த்திகேயன் கவுன்சிலர் உள்பட 5 பேரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த தாக்குதலில் கார்த்தியேன் காயம் அடைந்தார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

ஆனால் போலீசார் யாரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தவில்லை. நேற்று காலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் என்பவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டு எழுதி கொண்டார். அதன் பிறகே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் கவுன்சிலர் சம்பந்தப்பட்ட நிலையில் உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காதது ஏன் என விசாரிக்கப்பட்டது. பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், உயர் அதிகாரிகளுக்கு காலதாமதமாக தகவல் அளித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

மேலும் தி.மு.க. பிரமுகரை தாக்கிய அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ் உள்பட 5 பேர் மீது காயம் ஏற்படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், ஜான்சன், அபுதாகீர், சத்ராக் ஆகியோரை கைது செய்தனர். விசாரணை முடிந்ததும் போலீஸ் நிலைய காவலில் 4 பேரையும் போலீசார் விடுதலை செய்தனர்.

Tags:    

Similar News