உள்ளூர் செய்திகள்

கலப்பு திருமணம் செய்ததால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Published On 2023-04-10 15:09 IST   |   Update On 2023-04-10 15:09:00 IST
  • நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டியில் வசித்து வருகிறேன்.
  • இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகத்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.

சேலம்:

சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் - ஜானகி தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட ஜானகி இதுகுறித்து கூறும்போது, நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகத்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். இது சம்பந்தமாக வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், ஊர் தர்மகத்தா, எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாது, எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது, யாரையும் சந்திக்க கூடாது எனக் கூறி எங்களை ஒதுக்கி வைத்து விட்டனர். எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளரையும் ஒதுக்கி வைத்து விட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் எந்த பொருளும் வாங்க முடியாமலும், வாழவும் முடியாத சூழ்நிலை உள்ளது.

இது குறித்து தர்மகத்தாவிடம் கேட்டதற்கு, எங்கள் ஜாதி பெயரை சொல்லி பேசி மிரட்டினார். இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் ஊருடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும். எங்களை இழிவாக பேசிய தர்மகத்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Tags:    

Similar News