கோப்பு படம்
டெல்லி நறுமணப் பொருட்கள் கண்காட்சியில் கொடைக்கானல் மலைப்பூண்டு காட்சிப்படுத்த முடிவு
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மலைப்பூண்டை அறுவடைக்கு பின் சந்தைப்படுத்துதல்,மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
- டெல்லியில் நடக்கும் நறுமணப் பொருட்கள் கண்காட்சியில் கொடைக்கானல் மலைப்பூண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மலைப்பூண்டை அறுவடைக்கு பின் சந்தைப்படுத்துதல்,மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தலைமை வகித்தார்.பதிவாளர் ஷீலா முன்னிலை வகித்தார். இந்திய நறுமணவாரிய உதவி இயக்குனர் கனக திலீபன்,பேராசிரியர் உஷா ராஜா நந்தினி, தடியன்குடிசை நறுமண வாரிய பண்ணை மேலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி வல்லுநர்கள் பேசியதாவது:-புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு மருத்துவ குணம் கொண்டதாகும்.அறுவடைக்குப் பின் சந்தைப்படுத்துதலில் பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.இதை அடையாளப்படுத்துவதுடன் இடைத் தரகர் ஆதிக்கத்தால் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் பொருளாதாரம் நசுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெங்காய ஆராய்ச்சி நிலையத்தில் இதன் விதைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் நறுமணப் பொருட்கள் கண்காட்சியில் கொடைக்கானல் மலைப்பூண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மேலும் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என பேசினர். இந்நிகழ்வில் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.