கடலூர் கே.வி.டெக்ஸ் துணி கடையில் வருமானவரித்துறையினர் சோதனை செய்ய உள்ளே செல்வதை படத்தில் காணலாம்.
கடலூர்-புதுவை கே.வி. டெக்சில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது?
- தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துணிகளை வாங்கி சென்றனர்.
- ரூ.30 கோடியில் கே.வி. டெக்ஸ் கிளை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது. இந்த கடையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொது–மக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடலூர், சிதம்பரம் சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கே.வி.டெக்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சோதனை செய்தனர். இதனையடுத்து கே.வி. டெக்ஸ் நிர்வாகம் ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும் கணக்குகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு காலை வரை நீடித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கே.வி.டெக்சில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவை, கடலூரில் உள்ள கே.வி. டெக்ஸ் நிறுவனங்களில் இந்த சோதனை நடந்தது. கடலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கே.வி. டெக்சின் மற்றொரு கடையிலும் சோதனை நடந்தது. இதனால் இன்றும் பொது மக்கள் யாரும் கடைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கே.வி. டெக்ஸ் உரிமையாளர்களான கண்ணையன், வெங்கடேசன் ஆகியோர் வீடுகளிலும் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சென்னை கேளம் பாக்கத்தில் ரூ.30 கோடியில் கே.வி. டெக்ஸ் கிளை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த தகவல் வருமான வரித்துறைக்கு தெரிய வரவே கே.வி. டெக்ஸ் நிறுவனத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று விழுப் புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.