மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், கைது செய்யப்பட்ட காங்கிரசார், தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டபோது எடுத்த படம்
காங்கிரசார் ெரயில் மறியல் போராட்டம்
- தண்டவாளத்தில் தலை வைத்து படுக்க முயன்ற ஒரு நிர்வாகியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
- இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்,
ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசின் போக்கை கண்டித்தும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று மதியம் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி ஓசூர் ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியினர் ரெயில்நிலையத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமையில் மறியலில் ஈடுபட ரெயில் நிலையம் நோக்கி வந்த, மாநில செயலாளர் சிவகுமார், மாநகர தலைவர் தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேபோல், ஓசூர் ஆர்.சி. சர்ச் அருகே தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட முயன்றும், தண்டவாளத்தில் தலை வைத்து படுக்க முயன்ற ஒரு நிர்வாகியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசாரின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 150 பேர் கைது செய்யப்பட்டு, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.