உள்ளூர் செய்திகள்

பட்டா கத்தியுடன் அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது- பயணிகள் 'பீதி'

Published On 2023-05-17 09:23 IST   |   Update On 2023-05-17 09:23:00 IST
  • ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
  • மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர்.

ஆவடி:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்வது வருகின்றனர்.

இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று முன்தினம் காலை மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆவடி இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே சென்ற போது, மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர். அவரை சுற்றி நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், எங்களிடம் வம்பு செய்யாதே என கூச்சலிட்டபடி சென்றனர்.

இதனால் ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் தங்களது செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் ரெயிலில் பட்டா கத்தியுடன் செல்வது போன்ற காட்சிகள் வைரலானது, இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர், ஈக்காட்டை பவுண்ட்டை சேர்ந்த அபிஷேக் (வயது 20), சரண்ராஜ் (20), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுசம்பந்தமாக திருநின்றவூரை சேர்ந்த மனோஜ் (23) உள்ளிட்ட மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News