கோப்பு படம்
செம்பட்டி அருகே குடகனாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
- குடகனாற்று தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- எதிர்பாராமல் கால் தவறி வழுக்கி ஆற்றில் இருந்த நீர் சுழல் பகுதியில் விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே வக்கம்பட்டி அடுத்த முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஏசுபாளையத்தை சேர்ந்த அந்தோணி மகன் மரியகவுதம் (வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் பிரிவு 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வக்கம்பட்டியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் குடகனாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றிருந்தார். வீ.கூத்தம்பட்டி பார்வதி அம்மன் கோயில் அருகே உள்ள குடகனாற்று தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராமல் கால் தவறி வழுக்கி ஆற்றில் இருந்த நீர் சுழல் பகுதியில் விழுந்தார். இதில் தண்ணீருக்குள் அவர் மூழ்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் தண்ணீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த மரிய கவுதமை கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலியான மரியகவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து வேடசந்தூர் வரை செல்லும் குடகனாற்றில் யாரும் குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.