கண்ணண்டஅள்ளி, அத்திகானூர் அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
- பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இடைநிற்றல் மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அம்மாணவர்களை பள்ளியில் சேர்க்க பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா கண்ணண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளின் தூய்மை பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 -ம் தேதியும், 6 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 - ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு தொடக்க பள்ளிகள் என 1,714 பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 18 என மொத்தம் 1,732 பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வகுப்பறைகள், கழிப்பறை, பள்ளி வளாகம், சமையல் கூடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்ட பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு, இடைநிற்றல் மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அம்மாணவர்களை பள்ளியில் சேர்க்க பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின் போது, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, மகேஷ்குமார், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் பூம்பாவை, பள்ளி தலைமையாசிரியர்கள் சந்திரா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.