கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டும் பனியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
- தேவாலயங்களில் இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மணிக்கூண்டு புனிதவளனார் பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆயரின் செயலர் இளங்கோ, பேராலய பங்குதந்தை மரியஇஞ்ஞாசி, ஜார்ஸ் ஸ்டீபன், ஜாஸ்பர் ஆகியோர் சிறப்பு கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.
நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதேபோல் என்.ஜி.ஓ.காலனி, ரவுண்டுரோடு, சாலைரோடு பவுல்சர்ச் முத்தழகுபட்டி, மாரம்பாடி உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நத்தம், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆலயத்தில் இரவு 11 மணிக்கு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில்பாலன்இயேசு கிறிஸ்து உருவ அமைப்பு கொண்ட சிசு பொம்மை எடுக்கப்பட்டு தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த சிசு இயேசு கிறிஸ்து ஆலயத்தில் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்டு அதற்கு தூபம் காண்பிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.
ஆலயத்தில் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.