உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் மேம்பாலத்தின் கீழ்பகுதி இரவு நேர மதுபாராக மாறியது

Published On 2025-02-07 12:05 IST   |   Update On 2025-02-07 12:05:00 IST
  • மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.
  • பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு நகரத்தின் முக்கியமான பகுதியான அண்ணாநகர் பகுதியில் மாமல்லபுரம் செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் மேலமையூர் மற்றும் திருமணி ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பகுதி தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது. பாலத்தின் அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.

இதனால் அந்த இடம் தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது.

தினந்தோறும் மதுபோதையில் மோதல் சம்பவமும் நடந்து வருகிறது. போதை நபர்கள் பயன்படுத்திய காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கழிவுகள் அங்கேயே அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அந்த இடமே குப்பை கிடங்குபோல் மாறி உள்ளது.

பகல் நேரங்களிலும் பாலத்தின் கீழ் பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியே செல்லும் பொது மக்கள், பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்த வெளிபாராக மாறி உள்ளதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News