உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கார் டிரைவர் கொலை : முக்கிய குற்றவாளி பெங்களூருவில் பதுங்கல்

Published On 2023-09-06 06:25 GMT   |   Update On 2023-09-06 06:25 GMT
  • கார் டிரைவர் கொலை வழக்கில் இது வரை 6 ே பர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியை தேடி சென்ற போது அவர் தப்பி ஓடி விட்டார்.
  • ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான நடராஜனின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

மேலும் நடராஜன் நடத்தி வந்த நெய் கம்பெனியில் ரூ.6 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பிரச்சினையில் கடந்த மாதம் 17-ந் தேதி இரவு சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை நெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுரேசின் தாய் மாமன் வடிவேல் உள்ளிட்டோர் சேர்ந்து அம்பிளிக்கையில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய வடிவேல் (44) முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேஷ் உடலை எடுத்துச் சென்று மயானத்தில் எரித்த அம்பிளிக்கையைச் சேர்ந்த மனோகரன் (45), பாண்டி (37), தேனியைச் சேர்ந்த சிவஞானம் (58), நிலக்கோட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் (29), திருப்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இது வரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நடராஜனை தேடி சென்ற போது அவர் தப்பி ஓடி விட்டார். தற்போது அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Tags:    

Similar News