உள்ளூர் செய்திகள்

என்.பாறைப்பட்டி பகுதியில் தரைப்பாலம் உடைந்துள்ளதை படத்தில் காணலாம்.

திண்டுக்கல் அருகே கனமழைக்கு அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் தனித்தீவான கிராமங்கள்

Published On 2022-12-14 12:54 IST   |   Update On 2022-12-14 12:54:00 IST
  • கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
  • தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 10 கி.மீ சுற்றி சீலப்பாடி, அணைப்பட்டி வழியாக சென்றனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே தாடிக்ெகாம்பு அடுத்த டி.பள்ளபட்டி, சிக்கயகவுண்டனூர், பூசாரிகவுண்டனூர், மாரம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்றுவர சந்தனவர்த்தினி ஆற்றில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.

அந்த பாலம் சேதமடைந்ததால் அப்போதே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து கிராம மக்கள் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பாலத்தை கடந்து வந்தனர். தற்போது அந்த பாலம் மேலும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

இதனைதொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரமுடியாமல் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது தரைப்பாலத்தை ஆபத்தான முறையிலேயே கடந்து வருகிறோம். இந்த ஆண்டும் அதேநிலையே நீடிக்கிறது.

இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் சுமார் 25 கி.மீ சுற்றி வேடசந்தூருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் பழைய கரூர் சாலை தனியார் கல்லூரி அருகே என்.பாறைப்பட்டி கிராம மக்கள் சந்தனவர்த்தினி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இன்று காலை தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 10 கி.மீ சுற்றி சீலப்பாடி, அணைப்பட்டி வழியாக சென்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News