உள்ளூர் செய்திகள்

பூசாரியிடம் ரூ.21 ஆயிரம் லஞ்சம்: கைதான அறநிலையத்துறை அதிகாரிகள் சிறையில் அடைப்பு சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை

Published On 2022-09-28 15:17 IST   |   Update On 2022-09-28 15:17:00 IST
  • கோவிலில் பூசாரியாக உள்ளவர் அண்ணாதுரை. இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ரூ.21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
  • இல்லை எனில் கோவில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய விடமாட்டேன் என்றும் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் கூறியதாக தெரிகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமிகாந்தன் (வயது 51). இவர் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்த கோவிலில் பூசாரியாக உள்ளவர் அண்ணாதுரை. இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ரூ.21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லை எனில் கோவில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய விடமாட்டேன் என்றும் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் கூறியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பூசாரி அண்ணாதுரை இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.21 ஆயிரத்தை அண்ணாதுரை நேற்று ஏளூர் அகரம் பகுதியில் வைத்து செயல் அலுவலர் லட்சுமி காந்தனிடம் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான குழுவினர் லட்சுமிகாந்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் (45) லஞ்சம் வாங்க சொன்னதால் தான் பூசாரியிடம் லஞ்சம் வாங்கினேன் என கூறி உள்ளார். அதற்கான ஆடியோவையும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆணையர் ரமேஷையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கைதான 2 பேரையும் சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News