போடியில் கல்லூரி விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த மாணவர்
- ஒரு கழிவறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மற்ற மாணவர்கள் கதவை தட்டி உள்ளனர்.
- சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகில் உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ் (வயது20) என்பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று தேர்வு எழுதி விட்டு விடுதிக்கு வந்தார். பின்னர் மாலையில் கழிவறைக்கு சென்றவர் திரும்பவில்லை. மற்ற மாணவர்களும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் விடுதியின் ஒரு கழிவறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மற்ற மாணவர்கள் கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் உள்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் திறக்கப்படவில்லை. பின்னர் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மாணவன் விக்னேஷ் அமர்ந்த நிலையிலேயே இறந்து கிடந்தார்.
இது குறித்து போடி தாலுகா போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் எவ்வாறு இறந்தார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில் போலீசார் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.