உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திற்கு ஓவியங்களை வழங்கிய பெங்களூரு மாணவர்

Published On 2023-07-18 08:46 GMT   |   Update On 2023-07-18 08:46 GMT
  • புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
  • வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை வழங்கி உள்ளார்.

கிருஷ்ணகிரி,

பெங்களூரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாஸ்தா ரமேஷ். இவர் தான் வரைந்த இந்திய பாரம்பரிய ஓவியங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜிடம் வழங்கினார். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

மாணவர் சாஸ்தா ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க வந்தபோது இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து இதே போன்று பாரம்பரியம் மிக்க ஓவியங்களை வரைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, இந்திய பாரம்பரிய ஓவியங்களான 13 வகையான மயில்களை வாட்டர் கலரில் வரைந்து, புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

இந்த ஓவியப் புத்தகம் நியூயார்க் நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 13 வகையான ஓவியங்களில், பல நூறு ஆண்டுகள் பழமையான வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்திய பாரம்பரிய ஓவியங்களைப் பற்றியும், வகுப்புகள் எடுக்கவும், இது பற்றிய புத்தகம் எழுதவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம், அருங்காட்சியக பணியாளர்கள் பெருமாள், செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் போது 13 வகையான ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி பெற்று வரும் 3-ம் ஆண்டு வரலாற்று மாணவ, மாணவிகளுக்கு சாஸ்தா ரமேஷ் விளக்கம் அளித்தார்.

Tags:    

Similar News