ஆமைகளை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி
- விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களிடம் அழிந்து வரும் கடல்வாழ் ஆமைகளின் இனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இனப்பெருக்கத்திற்காக கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாக்கவும், கடலில் ஆமைகள் செல்லும் வழித்தடத்தில் மோட்டார் படகுகளை இயக்கி அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெகிழி கழிவுகள், ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தலைமையில் பழவேற்காடு பறவைகள் சரனாலய வணவர் நரசிம்மன் கடலோர பாதுகாப்பு அதிகாரி சபாபதி ஆகியோர் மாணவர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்குள் சென்று மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.