உள்ளூர் செய்திகள்

குடோனில் மேற்கூரை ஓட்டை விழுந்து உள்ள காட்சி.

சின்னசேலத்தில் அவலம் ஒழுங்குமுறை விற்பனை குடோன் ஒழுகுவதால் விவசாயிகள் கவலை

Published On 2022-09-03 08:37 GMT   |   Update On 2022-09-03 08:37 GMT
  • ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

சின்னசேலத்தில் உள்ள ஒழுங்கு விற்பனை கூடத்தில் 5 குடோன்கள் இருக்கின்றது. இதில் ஆயிரம் மற்றும் 500 மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன்கள் தமிழ்நாடு வாணிப நுகர் பொருள் கிடங்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1200 மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஒரே குடோனும் புதுப்பித்தல் என்ற பெயரில் தரமான மேற்கூரை சீட்டுகளை அகற்றிவிட்டு தரமற்ற தகர சீட்டுகளை கொண்டு மேற்கூரையாக போடப்பட்டுள்ளது. சமீபத்தில் அடித்த மழை காற்றின் காரணமாக தரமற்ற சீட்டுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. பிறகு இந்த கமிட்டியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முன்வந்து பறந்த தகர சீட்டை எடுத்து ஓட்டை விழுந்த இடத்தில் தற்காலிகமாக அதன் மேல் கல் வைத்து மூடி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே ஓட்டைகள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே வருவதால் விவசாயிகளின் தானிய மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் குடோன்களின் மேற்கூ ரையை தரமாகவும் உறுதியாகவும் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தலைகீழாக மாறி பணம் நோக்கமாகக் கொண்டு தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. சிறிய காயம் பெரும் தொந்தரவு என்பது போல விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற தரமற்ற சீட்டுகளை பொருத்துவதால் அரசாங்கத்தின் பணமும் வீணடிக்கப்பட்டு விவசாயிகளின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தரமான சீட்டு பொருத்தி விவசாயிகளின் தானிய மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News