உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே ஓட்டலில் பணம் பறிக்க முயற்சி- போலி உணவு அதிகாரி கைது

Published On 2023-12-04 15:17 IST   |   Update On 2023-12-04 15:17:00 IST
  • அபராதம் தவிர்க்க நான் சொல்லும் செல்போன் எண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றார்.
  • இவர் மீது கோயம்புத்தூர், நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயுத வழக்குகள், மோசடி வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

மண்ணச்ச நல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு கடந்த 2-ந் தேதி மாலை உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். அதில் பல குறைகள் இருப்பதாகவும் இதற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

அப்போது ஓட்டல் உரிமையாளர் இல்லாததால், அவரது செல்போன் எண்ணை வாங்கி அவரை தொடர்பு கொண்டார் அந்த நபர், அபராதம் தவிர்க்க நான் சொல்லும் செல்போன் எண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றார்.

இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், நான் வீட்டில் இருக்கிறேன் கடைக்கு வந்தபின் தருகிறேன் என அவரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெங்கடேஷ் உணவு பாதுகாப்பு அதிகாரியாக வந்தவரை பற்றி விசாரித்தார். இதில் அந்த நபர் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சி எஸ்.பியின் உதவி எண்ணுக்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக எஸ்.பி. வருண்குமார், அந்த நபரை பிடிக்க தனிப்படைக்கு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் விரைந்த தனிப்படை போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பாரி நகர் 5-வது தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் திரு முருகன்(வயது44) என்பதும், மெக்கானிக்கல் பொறியாளரான இவர், சென்னை கல்பாக்கம் அனு மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக 2018-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டு, தற்போது மண்ணச்சநல்லூர் தனியார் ஐஏஎஸ் அகாடமியில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர் மீது கோயம்புத்தூர், நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயுத வழக்குகள், மோசடி வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அரசு அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றதாக திருமுருகன் மீது மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News