உள்ளூர் செய்திகள்

உருண்டை வெல்லம் தயாரித்து அடுக்கி வைத்திருந்த போது எடுத்த படம்.

பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில்வெல்லம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

Published On 2023-05-11 12:52 IST   |   Update On 2023-05-11 12:52:00 IST
  • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
  • இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பா ளையம் ,வடகரையாத்தூர், கொத்தமங்கலம், தி.கவுண்டம்பாளையம் திடுமல், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பெரிய மருதூர் , சின்ன மருதூர், சிறு நல்லிக்கோவில் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையா ளர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2900 வரை விற்பனை செய்கின்றனர்.

வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி சூடேற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமை களில் வெல்லம் ஏலச் சந்தையில் உள்ள 13 ஏல மண்டியில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமா நிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,275 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,330 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,240 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,270 வரையிலும் ஏலம் போனது.

வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரி வடைந்துள்ளது. வெல்லம் விலை வீழ்ச்சியால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News