பொத்தனூர் பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
சம்பள உயர்வு கேட்டுபொத்தனூர் பேரூராட்சி ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டம்
- பொத்தனூர் பேரூராட்சி கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது.
- ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பேரூராட்சி, கடந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த பேரூராட்சிக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இப்பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியாளர்க ளுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஏற்கனவே வழங்கிய சம்பள தொகை ரூ.14,000-ஐ, தற்போது ரூ.10,000 ஆக குறைத்துள்ளனர். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.
நாள்தோறும் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாவும் கூறி இன்று காலை பணிக்குச் செல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குறைக்கப்பட்ட சம்பள தொகையை உடனடியாக அதிகரித்து வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பணி செய்வதற்கான ஊதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.