உள்ளூர் செய்திகள்

காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை

Published On 2022-06-11 15:14 IST   |   Update On 2022-06-11 15:14:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
  • மோதல் சம்பவத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (வயது 29), சிவா (20), முத்துப்பாண்டி (29). இதில் அஜித்குமார், முத்துபாண்டியன் இருவரும் ஆட்டோ டிரைவர்களாகவும், சிவா டாட்டா ஏசி டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் சிவா என்பவர் அஜித்குமாரின் மாமன் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சிவா தகராறு செய்துள்ளார். இதை கேள்விப்பட்ட அஜித்குமார், உறவினரான முத்துப்பாண்டி ஆகியோர் சிவாவிடம் ஏன் அங்கு சென்று பிரச்சனை செய்கிறாய்? நீ காதலித்த பெண் உனக்கு தங்கை முறையாகும் என்று கூறி கண்டித்துள்ளார்.

அப்போது சிவாவின் நண்பர் மணிமாறன் முத்துப்பாண்டியின் மனைவி குறித்து அவதூறான தகவல்களை கூறியுள்ளார். இதனால் மூவருக்குமிடையே வாய்தத்கராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். இதில் அஜித்குமாரை சிவா கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற காதல் தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News