வரும் 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம்
- வரும் 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
- ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
அரியலூர்:
அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற ஆட்சியரின் ஆய்வு கூட்டத்தை ஊரக வளர்ச்சித் துறையினர் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், பொறியாளர் சித்ரா ஆகியோரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்ததற்காக பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரனுக்கு மீண்டும் அதே பணியிடத்தில் பணி வழங்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17 (அ) , 17 (ஆ) குற்றச்சாட்டு குறிப்பாணிகளை ரத்து செய்ய வேண்டும். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை வருகை பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதிக்காதற்கும், ஊதியப்பட்டிலை கருவூலத்திற்கு அனுப்பாததற்கும் கண்டனம் தெரிவிப்பது.
மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் வளர்ச்சித் துறை ஊழியர்களை ஒருமையிலும், பண்பில்லாமலும் தடித்த வார்த்தைகளில் பேசி, மன உளைச்சலை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து 30 -ந் தேதி நடைபெறும் ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மைய செயற்குழு கூட்டத்தில் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் என 100 க்கும் மேற்பட்ட வளர்ச்சி துறை ஊழியர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறதா பட்சத்தில், ஏற்கனவே செயற்குழுவில் நிறைவேற்ற தீர்மானத்தின் படி வரும் 14 ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும், 28 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.