பூசாரியை அரிவாளால் வெட்டிய வாலிபர்
- தந்தையுடன் தகராறு காரணமாக பூசாரியை, வாலிபர் அரிவாளால் வெட்டினார்
- அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 50), கோவில் பூசாரி. இவரது சகோதரர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன்.
இதில் பாலையா வடவீக்கத்தில் வசித்து வருகிறார். பாலகிருஷ்ணன் ஜெயங்கொண்டத்திலும், ராதாகிருஷ்ணன் காட்மன்னார்குடியிலும் வசிக்கின்றனர்.
பாலையாவிற்கும் இவரது அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் வீட்டுமனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த வாரம் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பூசாரியாக இருந்த பாலையாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணனின் மகன் தாமரைச்செல்வன் (24) தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 20-ந் தேதி பாலையாவை கத்தி மற்றும் அரிவாளால் பல்வேறு இடங்களில் வெட்டியதாக தெரிகிறது.
இதில், படுகாயம் அடைந்த பாலையாவை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய தாமரைச்செல்வன் மற்றும் வசீகரன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.